தமிழ்நாடு
எச்.ராஜா மீது வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்குமா காவல்துறை!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு வன்கொடுமை செய்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் காலத்தில்தான் பட்டியலின மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், அவருடைய ஆட்சி இருண்ட ஆட்சி எனவும் குற்றம்சாட்டியிருந்தார். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகங்களில் இது தொடர்பாக விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் ரஞ்சித் மீது இரு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து முன் ஜாமீன் கோரி ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ரஞ்சித்துக்கு ஆதரவாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.
அதில், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையை நசுக்கும் வகையில் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தவறான வழக்கை ரத்து செய்ய வேண்டும். பாலிமர் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிராக சாதிய வன்மத்துடனான பதிவுகளைத் தடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித் மீது குற்ற எண்ணத்துடன் அவரின் மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோர் உள்ள குடும்பப் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதன் மூலம் தலித்மக்களை தூண்டி சட்டம், ஒழுங்கு மற்றும் சமூக அமைதியைச் சீர்குலைக்க முயலும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள், ரஞ்சித் குடும்பத்தினரின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வன்கொடுமை நடத்தியிருக்கிறார் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா. இதுபோன்று செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



















