இந்தியா
பிரதமர் மோடிக்கு மாம்பழம் அனுப்பிய மம்தா: மனக்கசப்பு நீங்குகிறதா?

பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழம் அனுப்பி உள்ளதை அடுத்து இருவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பு நீங்கி இனிப்பான உறவு தொடங்க போகிறதா என்ற கேள்வியை அரசியல் பிரமுகர்கள் எழுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலின் போது இருவரும் ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சனம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்தபோது அவரிடம் அவமரியாதையாக மேற்குவங்க முதல்வர் நடந்து கொண்டதாக கூறப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மிகவும் ருசியான மாம்பழங்களை பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அனுப்பி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையேயான மனக்கசப்பு நீங்கி விட்டதா? என்ற கேள்வியை அரசியல் பிரமுகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் அவர் பிரதமருக்கு மட்டும் அனுப்பாமல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல பிரமுகர்களுக்கும் மாம்பழங்களை அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர்களுக்கும் மாம்பழங்களை அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















