செய்திகள்
ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்… மதுரையில் பரபரப்பு….

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அதேபோல் மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மதுரை மேலூர் நகராட்சி 8வது வார்டில் ஒரு இஸ்லாமிய பெண் வாக்களித்த வந்தார். அப்போது அவர் ஹிஜாப் அணிந்திருந்தார். எனவே, அவரின் ஹிஜாப்பை அகற்றும்படி அங்கிருந்த பாஜக முகவர் கிரிராஜன் வற்புறுத்தினார். ஆனால், அப்பெண் ஹிஜாப்பை கழட்ட மறுத்தார்.

இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மற்ற முகவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே, அங்கிருந்த போலீசார் முகவர் கிரிராஜனை வெளியேற்றி விட்டனர். அதன்பின்னரே வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பல களோபரங்கள் வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாஜக முகவர் அதை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















