இந்தியா
மும்பைக்கு வருகிறது ‘பேங்க் ஆப் சீனா.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை குறி வைக்க திட்டம்..?

உலகின் நான்காவது பெரிய வங்கியான பேங்க் ஆப் சீனா இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் இதன் மூலம் ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக்க முயற்சி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சிலிக்கன் வேலி வங்கி திவால் ஆனதை அடுத்து இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திண்டாட்டத்தில் உள்ளன. இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கவர்ந்து இழுக்க பாங்க் ஆப் சீனா இந்தியாவில் தனது கிளையை தொடங்க இருப்பதாகவும் மும்பையில் இதற்கான இடம் குறித்த ஒப்பந்தமும் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
மும்பையின் முக்கிய பகுதிகளில் இந்த வங்கி அமைய உள்ளதை அடுத்து இந்த வங்கி ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை குறிவைக்கும் என்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகம் என்பது மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. எனவேதான் இந்தியாவில் பேங்க் ஆப் சீனா தனது கிளையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாக உள்ளன.
1912 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த வங்கி உலகின் நான்காவது மிகப் பெரிய வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. சீன தலைநகர் பீஜிங்கில் இந்த வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது என்பதும் சீன அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தியாவிலுள்ள இந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் தொழில் அதிபர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் பேங்க் ஆப் சீனா எந்த விதமான சலுகைகளை வழங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.