சினிமா செய்திகள்
அரண்மனை-4 அணிவகுக்கும் நடிகைகள்!

அரண்மனை4’ திரைப்படத்தில் நடிகை ராஷிகண்ணா மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அரண்மனை’. ஹாரர் – காமெடி பாணியில் உருவான இப்படம் வணிக ரீதியாகத் திரையரங்குகளில் வசூலைக் குவித்தது இதன் காரணமாகப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தயாரிக்கப்பட்டு வெளியானது.
கடைசியாக வெளியான அரண்மனை-3 வணிகரீதியாகத் திரையரங்குகளில் வசூலைக் குவிக்கவில்லை. படத்தின் பிற உரிமைகளை வியாபாரம் செய்ததன் மூலம் தயாரிப்புக்கான அசலை தேற்ற முடிந்தது .
அதனால் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் வராது என கூறப்பட்டது. ஆனால் லைகா தயாரிக்க உள்ள சங்கமித்ரா படத்தை இயக்கும் பணியில் சுந்தர்.சி பிசியானார். ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்பதால் அதற்குள்ளாக அரண்மனை – 4 இயக்கி முடித்துவிடலாம் என சுந்தர் – சி கூறியதால் அந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

Raashi Kanna in Aranmanai 4
இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகைகள் தமன்னா, ராஷிகண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏற்கெனவே, நடிகை ராஷிகண்ணா ’அரண்மனை3’-ல் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.