தமிழ்நாடு
2,600 கோடி… ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பின்னணியில் அண்ணாமலை? விசாரணை கோரும் காங்கிரஸ்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடிக்கு பின்னணியில் தமிழக பாஜகவும், அதன் தலைவர் அண்ணாமலை உள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். எனவே அவரை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 2,600 கோடிக்கும் மேல் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதில் அரசியல் பின்னணி உள்ளது. இதற்குப் பின்னால் பாஜக உள்ளது. அண்ணாமலையுடன் நிதி நிறுவன அதிபர் புகைப்படம் எடுத்துள்ளார் என்பதற்காக சொல்லவில்லை.
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த மூன்று பேரை அழைத்து விசாரித்ததில், பாஜகவின் ஆதரவு இதில் உள்ளது, நிறுவனத்தின் உரிமையாளர் பாஜகவில் பொறுப்பில் உள்ளார். அண்ணாமலையுடன் அவருக்கு தொடர்பு உள்ளது. எனவே இந்த நிறுவனம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் முதலீடு செய்தோம். ஆனால் அவர்கள் திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டார்கள் என தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் நேரடியாக அண்ணாமலையை விசாரிக்க வேண்டும். அண்ணாமலைக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும். வழக்கு போட வேண்டும் எனச் சொல்லவில்லை. விசாரித்தால் தான் உண்மை கிடைக்கும் என்று தெரிவித்தார் கே.எஸ்.அழகிரி.