தமிழ்நாடு
கொரோனா மாதிரிகளில் XBB வகை தான் அதிகம்: தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கொரோனா மாதிரிகள் XBB வகையைச் சேர்ந்தவை என சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
XBB வகை கொரோனா
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அவ்வகையில் தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தின் 2-வது வாரம் முதல் மார்ச் மாதம் வரை, சுமார் 144 கொரோனா மாதிரிகள் மாநில மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மாதிரிகளில் 83.6% XBB கொரோனா வைரஸ் வகையில் சேர்ந்தவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தான், முதன்முதலாக XBB கொரோனா வைரஸ் வகை உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதுவரையிலும் இந்த வகையின் கீழ் 13 உட்பிரிவுகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இது குறித்து பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது. ஏனென்றால் இந்த வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பெரிய அளவிலான மருத்துவ சிகிச்சை எதுவும் தேவைப்படாது என்பதால், தமிழக மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.