இந்தியா
ஏர் இந்தியா டாடாவிடம் ஒப்படைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி கொடுத்து டாடா நிறுவனம் வாங்கிய நிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக டாடாவிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் பல கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில் அந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது. ஆனால் ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கியதால் யாரும் வாங்க முன்வராத நிலையில் அந்த நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனம் முன்வந்தது.
டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா அவர்களுக்கு விமான நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கனவு இருந்த நிலையில் அந்த கனவை நனவாக்கும் வகையில் அவர் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முடிவு செய்தார். இதனை அடுத்து 18 ஆயிரம் கோடி கொடுத்து இந்திய அரசிடமிருந்து டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கியது.
மேலும் ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்க ஆயத்தப் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பதும் ஏர் இந்தியாவின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய பணிகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது ஏர்இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டாடாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.ஆர். டாடாவால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை எடுத்து அந்நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது குறித்து டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் அவர்கள் கூறியபோது, ‘ஏர் இந்தியாவை மீண்டும் டாடா குழுமத்தில் சேர்த்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை உருவாக்க அனைவருடன் இணைந்து செயல்பட நாங்கள் காத்திருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.


















