தமிழ்நாடு
பணியாரம் சரியில்லை என்று சொன்ன மனைவியை கொலை செய்த கணவன்: சேலத்தில் பரபரப்பு

வாங்கி வந்த பணியாரம் சரியில்லை என்று கூறிய மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சரண்யா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். லட்சுமணன் அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவி சரண்யாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு லட்சுமணன் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வரும்போது அவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக பணியாரத்தை வாங்கி கொண்டு வந்துள்ளார். அந்த பணியாரத்தை சாப்பிட்ட சரண்யா பணியாரம் நன்றாக இல்லை என்றும், ஏன் இதைப் போய் காசு கொடுத்து வாங்கினீர்கள் என்று திட்டியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் மனைவியை அடித்து உதைத்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் அடி தாங்காமல் மயங்கி விழுந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து போதை தெளிந்த லட்சுமணன் சரண்யாவின் சகோதரருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.
இதனை அடுத்து விரைந்து வந்த சரண்யாவின் சகோதரர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் லட்சுமணனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பணியாரம் நன்றாக இல்லை என்பதற்காக மனைவியை கொலை செய்த கணவனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


















