இந்தியா
பஞ்சாப் மாநில தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறதா? தேர்தல் ஆணையம் ஆலோசனை!

பஞ்சாப் மாநில தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பதும் இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மார்ச் மாதம் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் கழித்து அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி பஞ்சாப்பில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் வழிபடும் குரு ரவிதாஸ் அவர்களின் பிறந்த நாளையொட்டி புனித யாத்திரை மேற் கொள்வார்கள் என்றும் அதனால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் முதல்வர் சரண்ஜித் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனவே பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை ஒரு சில நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல் பஞ்சாப் பாஜக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் உள்பட பலரும் தேர்தல் ஆணையத்திற்கு இதே கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கோரிக்கையை அடுத்து பஞ்சாப் மாநிலத் தேர்தலை ஐந்து நாட்களுக்கு ஒத்தி வைக்கலாமா என தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த தேர்தல் ஆணையத்தின் முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.







