கிரிக்கெட்
ஒரு பந்து மீதமிருக்க பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மொஹாலியில் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி கடைசி ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#image_title
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ரன் குவிக்க தொடங்கும் முன்னரே அந்த அணி விக்கெட்டை பறிகொடுத்தது. 55 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது பஞ்சாப். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 36 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் மொஹித் ஷர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய குஜராத் அணி பெரிதாக அதிரடி ஒன்றும் காட்டவில்லை. மொத்தமாக ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டது. பொறுமையாக விளையாடிய குஜராத் அணி 19.5-வது ஓவரில் வெற்றி இலக்கை 4 விக்கெட்டை இழந்து அடைந்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் அணி. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 67 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது மொஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.