இந்தியா
மன்னிப்பு கேட்ட பின்னரும் வழக்குப்பதிவு: சித்தார்த்துக்கு சிக்கலா?

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய சித்தார்த் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட நிலையில் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த வார்த்தைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து சாய்னா நேவால் மற்றும் அவருடைய கணவரும் சித்தார்த் மீது தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இந்த பிரச்சனை முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென ஹைதராபாத் காவல் நிலையத்தில் சித்தார்த் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாய்னா நேவல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட சித்தார்த் மீது பிரேனா என்ற பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சித்தார்த் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
















