தமிழ்நாடு
ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்: பிரேமலதா விஜயகாந்த் மீதான வழக்கில் முக்கிய உத்தரவு!

ஒரு ஓட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வாங்குங்கள் என மக்களிடம் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் செய்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் 1000 ரூபாய் கொடுத்தால் வாங்காதீர்கள் என்றும் ஒரு லட்ச ரூபாய் கேட்டு வாங்குங்கள் என்றும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் வாக்களிக்கும் வாக்காளர்களை தவறான பாதைக்கு திசை திருப்பியதாக பிரேமலதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென பிரேமலதா தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் வாக்காளர்களை தவறாக வழி நடத்துவதற்காக அவ்வாறு பேசவில்லை என்றும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளூக்கு சவால் விடும் விதமாக பேசியதாகவும் தெரிவித்தார்.
அவரது கருத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிரேமலதா அவர்கள் தவறாக வழிநடத்தும் வகையில் இந்த கருத்தை குறிப்பிடவில்லை என்றும் பண வலிமையைக் காட்டும் விதமாகவும் வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கு சவால் கொடுக்கும் விதமாகவே அவரது பேச்சு பார்க்கப்படுவதாகவும் என்றும் எனவே அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றும் தீர்ப்பளித்தார். இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.


















