தமிழ்நாடு
ஜனவரி 16ஆம் தேதிக்கான முன்பதிவு நிறுத்தம்: பொங்கல் விடுமுறைக்கு சென்றவர்கள் நிலைமை என்ன ஆகும்?

ஜனவரி 16 மற்றும் அதற்குப் பிந்தைய தேதிக்கான முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றும் 50 சதவீத பயணிகளுடன் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல எந்தவித சிக்கலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு வரும் 13ஆம் தேதி சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் 16ஆம் தேதி திரும்ப திட்டமிட்டுள்ளனர். ஆனால் 16ஆம் தேதி மற்றும் அதற்கு பின் முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனால் பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி 16ஆம் தேதி மற்றும் அதற்கு பிறகு உள்ள நாட்களில் முன்பதிவு நிறுத்தப்படும் என்று கூறப்படுவதால் பொங்கலுக்கு பின் போக்குவரத்து நிறுத்தப்படுமா? என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் எழுப்பி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக போக்குவரத்து துறை விரைவில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








