தமிழ்நாடு
யூடியூபர் மாரிதாஸ் கைது: போலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு!

யூடியூபர் மற்றும் பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்படும்போது பாஜகவினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்தூரை சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதுகளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக மாரிதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் மதுரையில் யூடியூபர் மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் சற்று முன் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் பாஜகவினரும் அவரது வீட்டின் முன் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாரிதாஸை கைது செய்யும்போது போலீசார் மற்றும் பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. யூடியூபர் மாரிதாஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 505(2). பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணிகண்டன் விவகாரம் மட்டுமின்றி நேற்று முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் பலியான சம்பவம் குறித்து திமுகவினர் தங்களது சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்தை வெளியிட்டதாக ஒரு வீடியோவையும் மாரிதாஸ் வெளியிட்டு உள்ளதாகவும் இதனாலும் அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


















