சினிமா
குட் நைட் விமர்சனம்: ஒரே ஒரு பஞ்சு போதும்.. ஆனால், அது இல்லை மேட்டர்!

ஹீரோ என்றாலே மாஸாகத்தான் காட்ட வேண்டும் 50 முதல் 100 பேரை அடிக்க வேண்டும் என்று இருந்தால் தான் கமர்ஷியல் படம் என்றெல்லாம் இல்லைங்க என வெகு சில படங்கள் சொல்லி வரும் நிலையில், அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது இந்த குட் நைட்.
விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய்பீம் படத்தில் நடித்து மிரட்டிய மணிகண்டன், முதல் நீ முடிவும் நீ படத்தில் நடித்த மிதா ரகுநாத், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த வாரம் வெளியான குட் நைட் திரைப்படத்தின் மையக் கதையே குறட்டை தான்.

#image_title
குறட்டை விடும் ஹீரோவால் மற்றவர்களுக்கு ஏற்படும் தொல்லை மற்றும் அவருக்கே அதனால் ஏற்படும் பிரச்சனை. குறட்டையை போக்க அவர் செய்யும் முயற்சிகள் என சின்ன சின்ன விஷயங்களை எந்தளவுக்கு ஒரு நகைச்சுவை பேக்கேஜ் கொண்ட படமாக கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு கொடுத்து சிரிக்க வைத்து விடுகிறார் இயக்குநர்.
கலக்கப் போவது யாரு சீசன் 4ல் ரன்னர் அப் ஆன மணிகண்டன் சில்லுக்கருப்பட்டி, காலா, ஏலே, ஜெய்பீம், நெற்றிக்கண் என படத்துக்கு படம் வெரைட்டியான நடிப்பை காட்டி வரும் நிலையில், இந்த படத்தில் காமெடி கலந்த யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார்.

#image_title
ஒரே ஒரு பஞ்சை வைத்து காதை பொத்திக் கொண்டால் என்ன தான் குறட்டை விட்டாலும் கேட்காதே இதற்கு போய் இப்படியொரு படமா என நினைப்பவர்களுக்கு படத்தில் நிறைய சர்ப்ரைஸ் விஷயங்களும் சின்ன சின்ன விஷயங்களில் காமெடிகளை வைத்து ரசிக்கும் படி ஒரு திரைக்கதையை உருவாக்க முடியும் என்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
குறட்டை காரணமாக மணிகண்டனின் முதல் காதலி அவரை பிரிந்து விடுகிறார். மிதா ரகுநாத்திற்கு தனக்கு இருக்கும் அதீத குறட்டை பழக்கம் பற்றி சொல்லாமல் திருமணம் செய்துக் கொள்கிறார். முதலிரவிலேயே அவரது குறட்டை வியாதி அம்பலமாக அப்புறம் எப்படி ஒன்றாக படுப்பது, தனித் தனி படுக்கை தான் என்கிற ரேஞ்சுக்கு கதை நகர்கிறது.
குறட்டை பழக்கத்தை தவிர்க்க ஹீரோ எடுக்கும் முயற்சிகள், அதே போல இருக்கும் பலரும் முயற்சி செய்து பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கு.. ஹீரோ, ஹீரோயின் மட்டுமின்றி படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த ரோலை கச்சிதமாக செய்துள்ளனர். குட் நைட் – குட் படம்!
ரேட்டிங் – 3.5/5.