இந்தியா
மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது!

இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் மகாராஷ்டிர அரசு, தங்கள் மாநிலத்தில் இரவு ஊரடங்கை அமல் செய்தது. இந்நிலையில் இன்று முதல் டெல்லி அரசும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இரவு ஊடரங்கை அமல் செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகின்றன. இதனைத் தவிர பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியிலும் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மக்கள் நடமாட்டத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
அதேசமயம் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. முன்களப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் இயங்க தடையில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த இரவு ஊடரங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏப்ரல் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







