தமிழ்நாடு
கொரோனா தொற்றுக்கு ஆளானவர் தேர்தலில் போட்டியிட முடியுமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பரவலுக்கு இடையே பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்த போது கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் தான் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனாவால் ஒரு வேட்பாளர் பாதிக்கப்பட்டால் அவர் உடனே தனது பிரச்சாரத்தை நிறுத்தி விட வேண்டும் என்றும் அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேட்பாளர் கண்டிப்பாக 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாக்குப்பதிவு நாளன்று அவர் தனது வாக்கை செலுத்த விரும்பினால் கடைசி ஒரு மணி நேரத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் ஆனால் அந்த ஒரு மணி நேரத்தில் அவர் பிபிஈ உடை அணிந்துதான் வாக்களிக்க வரவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பரவியதை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவர் பிரச்சாரத்தை நிறுத்தி விட்டார் என்பதும் ஆன்லைன் மூலம் மட்டுமே தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















