தமிழ்நாடு
நீரில் மூழ்கி உயிரிழந்த 5 அர்ச்சகர்கள்: நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது 5 அர்ச்சகர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சென்னை அருகே நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அருகில் உள்ள மூவரசம்பேட்டையில் உள்ள குளத்தில் சாமியை குளிப்பாட்டினர்.
25 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 10 பேர் குளிக்க முற்பட்ட நிலையில் 5 பேர் குளத்தில் மூழ்கினர். நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்ற நிலையில் 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த கோவிலுடைய பொறுப்பு யாரிடம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இது பஞ்சாயத்து குளம் என்று சொல்கிறார்கள். இது கோவில் குளம் கிடையாது. கோவில் பக்தர்கள் இங்கே ஏன் வந்தார்கள் என சோதனை செய்ய வேண்டும்.
18 வயது சிறுவர்களும் அதில் இருந்துள்ளார்கள். மீண்டும் இதுபோன்ற உயிரிழப்பு நிகழக்கூடாது என்றார். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.




















