இந்தியா
அரிய புவி காந்த உற்பத்தி – இந்தியாவில் இந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது

புதுதில்லியில் இந்திய தொழில் மற்றம் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு மற்றும் மத்திய சுரங்கத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி பங்கு பெற்று பேசியதாவது..
அரிய புவி தனிமங்களின் தேவையில் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன்படி அரிய புவி நிரந்தர காந்த உற்பத்தி நடப்பாண்டிலேயே தொடங்கப்பட உள்ளது. இது மின்வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் தற்சார்பை உறுதி செய்யும் முக்கிய படிக்கல் ஆகும்.
நியோடைமியம், பிரசியோடைமியம் உள்ளிட்ட அரிய புவி தனிமங்களின் கொள்முதலில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில் இது தொடர்பான சுரங்க பகுதிகள் ஏலம் விடப்பட்டு வருகின்றன.
நாட்டில் அரிய கனிமங்கள் பிரித்தெடுப்பு-சுத்திகரிப்பு ஆலைகள் பற்றாக்குறையாக உள்ளன. இந்த சவாலுக்கு தீர்வு காணும் வகையில் ஆந்திரம், ஒடிசா, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் ஆலைகள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் ஆந்திர அரசுகள் ஏற்கனவே பணியைத் தொடங்கி விட்டன. விரைவில் ஒடிசா, மகாராஷ்டிரா மாநில முதல்வர்களை சந்தித்து பேச உள்ளேன்.
அரிய கனிமங்களின் உற்பமத்தியில் முழுமையான விநியோக சங்கிலியைக் கட்டமைக்க வேண்டும். இல்லையெனில் சுத்திகரிக்கப்பட்ட அரிய வகை கனிமங்களின் தேவையில் நாம் தொடர்ந்து இறக்குமதியைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கும் என்றார்.
மின்சார வாகனங்கள், காற்றாலை டர்பைன்கள், மின்னணுப் பொருள்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களின் தயாரிப்பில் முக்கிய அங்கமான அரிய புவி நிரந்தர காந்தங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கு உகந்த சூழலை கட்டமைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ரூ.7280 கோடி மதிப்பீட்டிலான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


