செய்திகள்
மகளிர் உரிமைத் தொகை: 50 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு தொடக்கம் – டிசம்பர் முதல் வாரத்தில் பட்டியல் வெளியாகிறது!

மகளிர் உரிமைத் தொகைக்கு மாநிலம் முழுவதும் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை அரசுத் துறை அதிகாரிகள் தற்போது தீவிரமாக சரிபார்த்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் நடைபெற்றது. இதில், நகர்ப்புற மக்களுக்கு 13 துறைகளின் 43 சேவைகளும், கிராமப்புற மக்களுக்கு 15 துறைகளின் 46 சேவைகளும் ஒரே தளத்தில் வழங்கப்பட்டன.
இந்த முகாம்களில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முன்பு சேர்க்கப்படாமல் விட்ட பெண்கள் அதிக அளவில் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
நவம்பர் 15 வரை நடத்தப்பட்ட இந்த முகாம்களில் சுமார் 50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் சரிபார்ப்பு பணிகள் தற்போது அரசால் தொடங்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்களின் வருமானச் சான்று, முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை முழு கவனத்துடன் பரிசீலிக்கப்படுகின்றன.
தகுதி பெற்ற பயனாளர்களின் இறுதி பட்டியல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வருமான வரி தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமானவரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவர். இதைத் தவிர, மற்ற பெண்களெல்லாம் தகுதியாக கருதப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இறுதி கட்ட சரிபார்ப்பின் ஒரு பகுதியாக, தேர்வு செய்யப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் டெபாசிட் அனுப்பி கணக்கு செயல்பாடுகள் சரிபார்க்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,
“டிசம்பர் 15ஆம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


