இந்தியா
ராமர் கோவிலுக்கு சோனியா, ராகுல் நிதியுதவி அளித்தார்களா? கோவில் அறக்கட்டளை பதில்

அயோத்தியில் புதிதாக கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் நிதியுதவி அளிப்பார்களா என்பது குறித்து அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் விளக்கமளித்துள்ளார்.
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயிலுக்கு நிதியுதவி திரட்டப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் வாரி வழங்கும் இந்நிதியை, ராம ஜென்மபூமி தீரத் ஷேத்ரா நியாஸ் அறக்கட்டளை பெற்று வருகிறது. கடந்த வாரம் குடியரசுத் தலைவர் தனது பங்கிற்கு 5 லட்சத்து 100 ரூபாய் நன்கொடை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், ராம ஜென்மபூமி தீரத் ஷேத்ரா நியாஸ் அறக்கட்டளையின் பொருளாளர் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கோயிலின் கட்டுமானப் பணிகள், நிதித் திரட்டும் திட்டத்தின் நிலை உள்ளிட்ட பல விஷயங்களைப் பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் கட்சியினரிடம், சோனியா, ராகுலிடம் நிதியுதவி கேட்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அறக்கட்டளைப் பொருளாளர், ‘சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் வீட்டிற்குச் சென்று நிதியுதவி கேட்டால், எந்த அவமரியாதையும் ஏற்படாது என்று யாராவது உத்தரவாதம் அளித்தால் நிச்சயமாக நிதியுதவி கேட்போம்’ என்றார்.