இந்தியா
சாட்பாட்டிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு ஏஐ என்பது நமது அன்றாட வாழ்க்கையின் பிரிக்கமுடியாத அங்கமாகி பிட்டது. பலர் தினமும் சாட்ஜிபிடி, ஜெமினி, பெர்பிளக்சிட்டி க்ரோக் போன்ற எண்ணற்ற ஏஐ சாட்பாட்டுகளுடன் உரையாடுகிறார்கள். அவற்றிடம் கேள்வி கேட்டால் உடனே பதில்களோ தீர்வுகளோ கிடைக்கின்றன.இவ்வாறாக மனிதர்களைப் போலவே கூடவே இருந்து பதிலளிக்கும் இந்த தொழில்நுட்பம் நம்மை மிக நெருக்கமாக ஈர்த்து ஆட்கொள்கிறது.
ஆனால் இந்த நெருக்கமே சில நேரங்களில் ஆபத்தாகவும் மாறிவிடுகிறது. சமீபத்தில் கூட ஒரு சாட்பாட் கொடுத்த ஒரு தீர்வை புறக்கணித்த பணியாளர் ஒருவருக்கு எதிராக அந்த சாட்பாட்டே எதிர்வினையாற்றி அவரைப்பற்றி அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவிட்டதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். இப்படியாக வரக்கூடிய ஆபத்துக்களை உணராமல் நம்மிடம் உள்ள பல்வேறு விஷயங்களை நாம் அவற்றாடு பகிர்ந்து கொண்டு வருகிறோம்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் சாட்பாட்டிடம் எந்த விஷயங்களை பகிரலாம்? எந்த விஷயங்களை பகிரக்கூடாது என்பதை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அவை என்னவென்று ஒவ்வொன்றாக பார்ப்போமா?
தனிப்பட்ட தகவல்கள்
உங்கள் முழுப்பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண், குடும்ப உறுப்பினர்களின் விவரம் இவை எல்லாம் சாதாரண விவரங்கள் போலத் தோன்றினாலும் இவை உங்கள் அடையாளத்தை உருவாக்கும் தகவல்கள். அவற்றை தவறாக பயன்படுத்தவது அடையாள திருட்டு மோசடியாகும். எனவே அவற்றை சாட்பாட்டிடம் பகிரக்கூடாது.
கடவுச் சொற்கள்
கடவுச்சொற்களையும் பகிரக்கூடாது. நினைவில் வைத்துக்கொள்ள உதவிசெய் என்று சாட்பாட்டிடம் சொல்லுவதும் கூட தவறுதான்.
வங்கி மற்றும் நிதி விவரங்கள்
வங்கி கணக்கு எண், கடன்அட்டை, பணஅட்டைஈ நெட்பேங்கிங் விவரங்கள் இவற்றின் தவறான கசிவு கூட பெரிய அளவிலான நிதி இழப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.
அலுவலக ரகசியங்கள்
வேலை தொடர்பான ஆவணங்கள், நிறுவன தரவுகள் ஆகியவற்றை திருத்திக்கொடு என்றும் சுருக்கிக்கொடு என்றும் கூறி பகிர்வதும் பல நேரங்களில் ஆபத்தை நோக்கி பயணிப்பதாக அமைந்துவிடும்.
மனநல பகிர்வுகள்
நண்பரிடம் சொல் முடியாததை குடும்ப உறுப்பினர்களிடம் சொல்ல முடியாததை கூட சாட்பாட்டிடம் சொல்லி தீர்வு காண முடிகிறது என்று நினைப்பீர்களே ஆனால் அது உங்கள் ரகசியங்களை உணர்ச்சி அடிப்படையில் பாதுகாக்கும் என்ற எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.
மருத்துவ தகவல்கள்
உங்களது உடல்நிலை, மருந்துகள், மருத்துவ அறிக்கைகள் போன்றவையும் தனிப்பட்ட தகவல்களே. அவற்றையும் சாட்பாட்டிடம் பகிரக்கூடாது.
சட்ட பிரசை்னைகள்
சாட்பாட் ஒரு நல்ல சட்ட ஆலோசகராக செயல்பட முடியாது. அதனுடன் வழக்குகள், ஆவணங்கள், சாட்சிகள் போன்ற தகவல்களை பகிர்வதும் ஆபத்தே. அதனால் மிகப்பெரும் சட்ட சிக்கல்கள சந்திக்க வேண்டிய சூழல்களும் ஏற்படலாம்.
அடையாள ஆவணங்கள்
அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், தனிப்பட்ட புகைப்படங்கள்,பொதுவான கடவுச்சொற்கள், மின்னஞ்சல் கணக்கு விவரங்கள் ஆகியவற்றையும் பகிர வேண்டாம்.
இது போன்ற விஷயங்களை பகிர்வதால் உரிமை தொடர்பான சட்ட சிக்கல்களுக்குள் நிங்கள் சிக்க நேரிட்டு விடலாம்.
ஏஐ சாட்பாட்டுகள் அதிபுத்திசாலித்தனமான கருவிகள் ஆனால் அவை நண்பர்கள் அல்ல. தொழில்நுட்பத்தை நம்பி பயன்படுத்துங்கள். அதே நேரத்தில் அளவு கடந்த நம்பிக்கை வைத்து மோசம் பொய் விடாதீர்கள்.
எச்சரிக்கையாக இருங்கள்.

