இந்தியா
மேற்குவங்கத்தில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை!

பாஜக தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷாவின் ஹெலிகாப்டர் மேற்குவங்கத்தில் தரையிறங்க விதிக்கப்பட்ட தடையால் தேசிய அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் பிரதான கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதனையடுத்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மக்களவை தேர்தலை முன்னிட்டு நாளை மேற்குவங்க மாநிலத்தின் மல்டா மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
பாஜகவுக்கு எதிராக மிகவும் பிரம்மாண்டமாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில் நாளை பாஜக மேற்குவங்கத்தில் நடத்த உள்ள பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்றுப்பேச உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்காக கொல்கத்தா வரும் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மல்டா செல்வதாக இருந்தது. இந்நிலையில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான அனுமதியை தர மல்டா விமான நிலைய நிர்வாகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாஜகவுக்கு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், மல்டா விமான நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அங்கு ஹெலிகாப்டரை தரையிறக்க முடியாத நிலை உள்ளது. மேலும் தற்காலிக ஹெலிபேடும் தயார் நிலையில் இல்லை. எனவே ஹெலிகாப்டரை தரையிறக்க அனுமதி தர முடியாது என கூறப்பட்டுள்ளது.
ஆனால் வேண்டுமென்றே மம்தா பானர்ஜீ அரசு பாஜகவை செயல்படவிடாமல் தடுக்கிறது என்றும், ஏற்கனவே ரத யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்து அதை நடத்த விடாமல் செய்தது போல தற்போது இந்த பொதுக்கூட்டத்தையும் தடுக்க சதி செய்கிறது என குற்றம்சாட்டியுள்ளது பாஜக.



















