இந்தியா
மோடி அமைச்சரவையில் சக்திவாய்ந்த 4 பேர்: இவர்கள் கையில் தான் இனிமேல் இந்தியா!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது அரசு கடந்த 30-ஆம் தேதி பதவியேற்றது. பிரதமர் மோடி உள்ளிட்ட 58 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இவர்களுக்கான துறைகளுக்கான பட்டியலை குடியரசுத்தலைவர் மாளிகை நேற்று வெளியிட்டது.
இந்த அமைச்சரவையில் சக்திவாய்ந்த நபராக 4 பேர் பார்க்கப்படுகிறார்கள். பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் இடம்பிடித்திருக்கும் அமைச்சர்கள் தான் அமைச்சரவையின் அதிமுக்கிய அமைச்சர்களாக கருதப்படுவார்கள். பிரதமர் தலைமையில் செயல்படும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகிய அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.
அரசின் முக்கியமான கொள்கை முடிவுகள், நடவடிக்கைகள் அனைத்துமே இந்த குழுவினரின் ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும். உள்துறை அமைச்சரான அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ் நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெயசங்கர், நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் ஆகியோர் புதிய அரசின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் செயல்படும் இந்த குழுவே முக்கிய விவகாரங்களில் பிரதமருக்கு ஆலோசனைகளையும், திட்டங்களையும் வழங்கும். இனிமேல் இந்த 4 பேரின் கையில்தான் இந்தியா இருக்கிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.


















