தமிழ்நாடு
வேதா இல்லம் வழக்கில் திடீர் திருப்பம்: குஷியில் அதிமுக தலைவர்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தங்களுக்கே சொந்தம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது என்பதும், அதன் பின்னர் சென்னை மாவட்ட கலெக்டர் வேதா இல்லத்தின் சாவியை தீபா, தீபக்கிடம் ஒப்படைத்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் வேதா இல்லத்தை தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என அதிமுக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தீபா மற்றும் தீபக் ஆகிய இருவருக்கும் சொந்தம் என்று வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் வேதா இல்லத்தை கையகப்படுத்துவதை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நினைவு இல்லம் விவகாரத்தில் அதிமுக சம்பந்தப்பட்ட தரப்பு அல்ல என கூற முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதோடு, மேல்முறையீட்டு மனுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற தீபக் மற்றும் தீபாவின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இன்னும் ஒரு சில நாட்களில் அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வேதா இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றுவதற்கான வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


















