தமிழ்நாடு
முலாம் பூசப்பட்ட போலிகள்: செந்தில் பாலாஜியை விளாசிய டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் சேர உள்ளதாக சில தினங்களாக தகவல் பரவி வருகிறது.
செந்தில் பாலாஜி திமுகவில் சேர உள்ளதாக வரும் செய்திதான் தற்போது அரசியலில் பேசும் பொருளாக உள்ளது. இன்று டிடிவி தினகரனின் பிறந்தநாள். ஆனால் அதனை யாரும் கொண்டாட வேண்டாம். சிறு விளம்பரம் கூட செய்யக்கூடாது என டிடிவி தினகரன் கண்டிப்புடன் அறிவுறுத்தியிருந்தார். செந்தில் பாலாஜி திமுகவில் சேர உள்ளதால் அப்செட் ஆன தினகரன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் செந்தில் பாலாஜியை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விளாசியுள்ளார். அந்த அறிக்கையில், துரோகிகளும், விரோதிகளும் அமமுகவின் வளர்ச்சியை தடுக்க முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுகவின் எழுச்சியைத் தடுத்து, வளச்சியை முடக்கும் செயலில் சிலர் தீவிரமாக செயல்படுகின்றனர்.
ஒரு சிறு குழு விலகிச் செல்வதால் அமமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யார் வருந்தப் போகிறார்கள்? ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா? என்று கடுமையாக செந்தில் பாலாஜியை போலி என விளாசியுள்ளார் டிடிவி தினகரன்.




















