தமிழ்நாடு
மகாராஷ்டிரா மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பள்ளிகள் திறக்க வேண்டும்: கோரிக்கை ஏற்கப்படுமா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 24ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆகும் என்று அறிவித்துள்ள நிலையில் அதே போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக மீண்டும் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலை ஏற்று மகாராஷ்டிர மாநிலம் ஜனவரி 24ஆம் தேதி முன் மாணவர்களின் கற்றல் நிலை பாதிக்கக்கூடாது என்பதற்காக மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது. அதே போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வேண்டுமென தமிழ்நாடு சிபிஎஸ்சி, நர்சரி மெட்ரிக் பள்ளிகளின் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் நந்தகுமார் என்று அவர் கூறியபோது கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு வசதிகள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மாணவர்களுக்கு தடுப்பூசிகளும் முறையாக செலுத்தப்பட்டு உள்ளதாகவும் அதனால் பள்ளிகள் திறப்பதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்றும் கூறினார்.
மேலும் திரையரங்குகள் மதுக்கடைகள் போன்றவையெல்லாம் திறந்து இருக்கும் சூழ்நிலையில் மாணவர்களின் கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்களை மட்டும் ஏன் மூட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.














