தமிழ்நாடு
புதிய கல்வி கொள்கையை மறைமுகமாக ஏற்று கொண்டதா தமிழக அரசு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த நிலையில் தற்போது மறைமுகமாக புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வருவதாக கூறப்படும் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையை கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்றுக் கொண்டன என்பதும் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக ஆதரித்து சில அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இல்லம் தேடி கல்வி என்ற அறிவிப்பு புதிய கல்விக் கொள்கையில் உள்ள தன்னார்வலர்களை வைத்து கல்வி கற்பிக்கும் திட்டம் என்றும், அதே போல் ஆசிரியர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்புப் புதிய கல்விக் கொள்கையில் உள்ள தொழில் வளர்ச்சி என்ற திட்டம் என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்று புதிய கல்விக் கொள்கையில் உள்ள திட்டங்களை வெவ்வேறு பெயர்களில் மறைமுகமாக தமிழக அரசு அமல்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. ஆசிரியர்களான திறனை மேம்படுத்தும் பயிற்சிதான் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பயிற்சி என்றும் இதற்கும் புதிய கல்விக் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளது.
















