இந்தியா
நகைக்கடையை கொள்ளையடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்..!

நகை கடைக்கு கொள்ளை அடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள் தங்களது முயற்சி பலனளிக்கவில்லை என்பதை அறிந்து நகைக்கடைக்காரர் இடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்ற சம்பவம் மீரட் நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மீரட் நகரில் உள்ள பிரதான பகுதியில் தீபக் என்பவர் நகைக்கடை வைத்து இருக்கிறார். இந்த கடைக்கு திருட இரண்டு கொள்ளையர்கள் முடிவு செய்து பல நாட்கள் ஆக நோட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு கிட்டத்தட்ட 15 நாட்களாக நகை கடைக்கு செல்லும் வகையில் 15 அடி நீளத்தில் சுரங்கம் தோண்டியதாக தெரிகிறது.
இதனை அடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்த தினத்தில் அந்த திருடர்கள் கேஸ் கட்டர்கள் உள்பட ஆயுதங்களை கொண்டு வந்து நகைக்கடையின் கதவை உடைத்து நகை கடைக்குள் நுழைந்தனர். ஆனால் நகைக்கடையில் உள்ள பெட்டகத்தையே அவர்களால் திறக்க முடியவில்லை. கேஸ் கட்டர்கள் இருந்தும் கேஸ் கட்டர் மூலம் அந்த பெட்டகத்தை திறக்க முடியாததால் அவர்கள் தங்கள் கொள்ளை முயற்சியில் தோல்வி அடைந்தனர்.
மேலும் அந்த பெட்டகம் அருகே கிருஷ்ணர் சிலை இருந்தது. அந்த சிலையை அவர்கள் திருப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. நாம் திருடுவதை கடவுள் பார்க்க கூடாது என்பதற்காக அவர்கள் சிலையை திருப்பி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இனிமேல் பெட்டகத்தை திறக்க முடியாது என்று முடிவு செய்ததை அடுத்து அந்த கொள்ளையர்கள் சுவற்றின் மேல் ’சாரி’ என்று எழுதி அதன் பிறகு மாயமாகிவிட்டதாக தெரிகிறது.
மறுநாள் தீபக் தனது நகைக்கடையை திறக்க வந்த போது சுவரில் ஓட்டை போடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பெட்டகத்தில் எந்த நகையும் திருடப்படவில்லை என்பதை அறிந்து அவர் நிம்மதி அடைந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணையை தொடங்கினார்.
சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடர்கள் திருடி சென்று விட்டதால் அந்த பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமராக்கள் மூலம் திருடர்களை அடையாளம் காண முயற்சி செய்தனர். நீண்ட முயற்சிக்கு பிறகு திருடர்கள் சுன்னு மற்றும் முன்னு ஆகிய இருவர் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இருவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
நகைக்கடையை கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் அந்த முயற்சி பலனளிக்காததால் நகைக்கடை ஓனருக்கு சாரி சொல்லி விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.