தமிழ்நாடு
5 ஆண்டு ஆட்சியை ஆண்-பெண் சமமாகப் பிரித்துக்கொள்ளலாம்..!- ஓ.பி.எஸ்

ஐந்து ஆண்டு கால ஆட்சிப் பொறுப்பை ஆண் தலைவர் ஒருவரும் பெண் தலைவர் ஒருவரும் சமமாகப் பிரித்துக் கொண்டு ஆளலாம் என தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்குவதற்கான கருத்தரங்கம் ஒன்றில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “பெண்களுக்கான உரிமையும் பாதுகாப்பும் சமமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக ஆட்சிப் பொறுப்பை ஆண் தலைவர் ஒருவர் 2.5 ஆண்டுகளும் பெண் தலைவர் ஒருவர் 2.5 ஆண்டுகளும் என ஆட்சிப் பொறுப்பை சமமாகப் பிரித்துக்கொள்ளலாம். ஆட்சியில் வழங்கப்படும் இந்த சம உரிமை திறனுடனான ஆட்சி அமைப்பை சிறப்பானதாக வழங்கும். எந்தவொரு நிர்வாகத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒடுக்க அரசு அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.














