செய்திகள்
“திடீர் தலைசுற்றல்… களைப்பு…”- மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மு.க.ஸ்டாலின் – தற்போது எப்படி இருக்கிறார்?

தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் தனது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னையில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கடந்த சில நாட்களாக வழங்கி வருகிறார் ஸ்டாலின். இதில் தனது கொளத்தூர் தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அப்படி அவர் கொளத்தூருக்குச் சென்றிருந்தபோது திடீரென்று ஸ்டாலினுக்குத் தலை சுற்றியுள்ளது. தொடர் சுற்றுப் பயணங்களால் சற்றுக் களைப்பாகவும் இருந்துள்ளார்.
இதனால் உடனடியாக அவரை கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவரது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. அது சற்று அதிகமாக இருந்ததே உடல்நலக் குறைவுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
திடீரென்று மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறித்து ஸ்டாலின், ‘லேசான தலை சுற்றலுடன் மயக்கம் இருந்தது. களைப்பாக உணர்ந்தேன். இதன் காரணமாக ரத்த அழுத்த சோதனை மற்றும் ஈ.சி.ஜி சோதனைகள் செய்யப்பட்டன. இதையடுத்து மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டுப் போவச் சொன்னார்கள். அவர்கள் அறிவுரையின்படி ஓய்வெடுத்துவிட்டு புறப்பட்டேன். மற்றப்படி நல்ல உடல் ஆரோக்கியத்தோடுதான் இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
ஸ்டாலினுக்கு பெரிய உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், அவர் செய்தியாளர்களை சந்தித்து எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


















