தமிழ்நாடு
தமிழக மீனவரை சுட்டது சட்டத்தை மீறிய செயல், எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது: டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழக மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றது இருமாநிலங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கர்நாடகாவின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது சட்டத்தை மீறிய செயல் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

#image_title
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அடிப்பாலாறு பகுதியில் கடந்த 14-ஆம் தேதி இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா என்ற மீனவர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
மீனவர் ராஜாவும், அவரது நண்பர்களும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மான் வேட்டையாடியதால் வானத்தை நோக்கி சுட்டதாக வனத்துறையினர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மீனவர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர துப்பாக்கி சூடு நடத்தியது சட்டத்தை மீறிய செயலாகும். எந்த வகையிலும் அதனை நியாயப்படுத்த முடியாது.
இந்த துயரச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பின்னரும் இது குறித்து கர்நாடக வனத்துறைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது மீனவர் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜா உயிரிழக்கக் காரணமான கர்நாடக மாநில வனத்துறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன், உயிரிழந்த மீனவருக்கு இருமாநில அரசுகளும் நிதி உதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர் ராஜாவை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 50 லட்சம் துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.















