தமிழ்நாடு
‘சசிகலா உயிருக்கு ஆபத்து; எவன் இதை பண்றான்..?’- வெடித்தெழுந்த சீமான்

சசிகலா, இன்னும் ஒரு சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையாக உள்ள நிலை திடீரென அவரது மோசமடைந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, இதற்குப் பின்னால் எதாவது சதி வேலைகள் நடைபெறுகிறுகின்றனவா என்கிற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இதற்கு அச்சாரம் சேர்ப்பது போல சசிகலாவின் சகோதரரான திவாகரன் முன்னதாக, ‘அவரு உயிருக்கு சிலரால் ஆபத்து இருக்குங்க..!’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சசிகலா விவகாரத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு சில நாட்களுக்கு முன்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை, சிறை நிர்வாகம் நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது. அங்கு அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், பெங்களூருவில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். வரும் 27 ஆம் தேதி சசிகலா, விடுதலையாக இருக்கும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தீவிர உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீமான், ‘இன்னும் சில நாட்கள்ல சசிகலா அம்மையார் வெளியே வர்றதா இருக்குற நிலையில, அவங்களுக்கு எப்படி திடீர்னு உடல்நிலை மோசமாகுது. அதுவே சந்தேகத்தை எழுப்புதுல்ல. யாருக்கு கொரோனா வரும்? பொது வெளியில சுற்றித் திரிஞ்சுட்டு இருக்குறவங்களுக்கு. சசிகலாதான் சிறையில யாரையும் பார்க்காம தனியா இல்ல இருந்தாங்க. அவங்களுக்கு எப்படி கொரோனா வந்துச்சு. இது எல்லாம் சந்தேகத்தை எழுப்புமா எழுப்பாதா?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுள்ளார். சீமான், சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிப் பயணம் செய்ததற்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று கேட்டும் விமர்சித்துள்ளார்.



















