இந்தியா
காவல்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது மூலமே சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியும்

இந்தியாவில் மரணங்கள் மட்டுமே பேசப்படுகின்றன. எண்ணப்படுகின்றன. காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான பெரிய விழிப்புணர்வோ/கண்காணிப்போ/தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப் பட்டது. அரிதினும் அரிதான இந்த வழக்கு மரண தண்டனைக்குரிய குற்றம் என்றும், இம்மரண தண்டனை கடும் எச்சரிக்கையாக அமையும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக, இந்த தீர்ப்பு கருத்து தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினரும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், ” குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தாலும், கடமை தவறிய மருத்துவர்கள், குற்றவியல் நடுவர், உண்மையை மறைக்க முயன்ற உயரதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு” என்று தெரிவித்தார்.
காவலர்களும் காவல் நிலையங்களும் குற்றவாளிகளுக்கும் குற்றம் செய்யத் தூண்டுபவர் களுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டுமே தவிர சாதாரண அப்பாவி பொதுஜனங்களை அச்சுறுத்தவும் காவல்துறையினரால் அப்பாவிகளுக்கு எத்தகைய கொடூரங்களை வேண்டுமானாலும் இழைத்துவிட்டு தங்களின் பணியின் ஒரு பகுதியாக இதனை கருதும் பெரியண்ணன் மனோபாவம் மாறவேண்டும் என்பதே ஏழை நடுத்தர மற்றும் அப்பாவி பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. காக்கிச் சட்டை போட்டுவிட்டால் யார்? என்ன? எப்படி? என்ற தராதரம் பார்க்காமல் அப்பாவிகளை அதிலும் வயது முதிர்ந்தவர்களைக் கூட டேய் வாடா போடா என்று பேச இவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இருக்கிறதா என்ன? அவ்வாறு சாதாரண அப்பாவிகளிடம் நடந்து கொள்பவர்கள் பணம் வசதி படைத்தவர்கள் ஆள்பலம் கொண்டவர்கள் அரசியல்வாதிகளைக் கண்டால் பம்மிக் கொண்டு செல்வது ஏன்? குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பலம் மிக்கவர்களாக இருந்தால் கூழைக் கும்பிடு போடுவதம் குற்றமே செய்யவில்லை என்றாலும் அப்பாவி பொதுஜனங்களை நாயை விடக் கீழ்த்தரமாக நடத்துவதும் ஏன்? என்று சமூக ஆர்வர்களும் பொதுநல விரும்பிகளும் கேட்கின்றனர்.
கோலீஸ் உங்கள் நண்பன் என்றும் Ideal Police Station என்றும் பொதுமக்களிடம் வேஷம் போடும் இவர்கள் அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறி அவர்களை அலட்சியப் போக்குடனும் அவ மரியாதை யுடனும் நடத்துவது என்று மாறுமோ அன்றுதான் காவல்துறை மீது சாதாரண பொதுமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அந்த நம்பிக்கை பிறக்க பொதுமக்களிடம் காவல் துறையினர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து மிகவும் கண்டிப்பான நடைமுறைகள் வகுக்கப்பட்டு அவை முறையாக பின்பற்றப்பட்டால்தான் பொதுமக்களிடம் காவல்துறையினர் மீதான அபிப்பிராயங்கள் மாறும். அதுவரை போலீஸ்காரனுக்கு பெண் கொடுக்காதே… போலீஸ்காரன் வீட்டில் பெண் எடுக்காதே… போலீஸ்காரனுக்கு வீடு கொடுக்காதே என்று மக்களிடம் பரவிவரும் கூற்றுக்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப் பட்டுக் கொண்டேதானிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
இந்த தீர்ப்பு காவல்துறை பற்றியும் குற்றவியல் பற்றியுமான உரையாடலை மீண்டும் ஒரு முறை தொடங்கியுள்ளது. காவல் மரணங்கள் தொடர்பான விசயங்களில் இந்த தீர்ப்பு மிக முக்கியமான மைல்கல்லாகாக அமையும் என்றும் சட்ட வல்லுநர்கள் நம்புகின்றனர். அதேசமயம், காவல் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது மூலமே சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

