தமிழ்நாடு
அமைச்சரவையை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும்: ராஜன் செல்லப்பா குரல்!

சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தற்போது அமைச்சரவையை மாற்ற வேண்டும் எனவும் புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி குரல் எழுப்பியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டன் நீக்கப்பட்டு அவரது துறை கூடுதலாக அமைச்சர் உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே நேரத்தில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி சிறைக்கு சென்றுவிட்டதால் அவரது துறையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கவனித்து வருகிறார். இந்த இரண்டு துறைகளையும் கைப்பற்ற அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் போட்டி போட்டுக்கொண்டு தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் மதுரையில் பேசிய மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, அமைச்சர்களை நீக்க முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. நிர்வாகரீதியாக அவர் அமைச்சர்களை மாற்றலாம். புதிய அமைச்சர்களை அவர் நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அமைச்சரவையை மாற்ற வேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா கூறியது அதிமுகவில் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.







