தமிழ்நாடு
இந்த லட்சணத்தில் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்கிறாராம்: ஸ்டாலின் விளாசல்!

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 28-ஆம் தேதி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார். முதல்வரின் வெளிநாட்டு பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று. இந்த பயணத்தில் முதலில் லண்டன் செல்லும் எடப்பாடி பழனிசாமி அடுத்து அமெரிக்கா என மொத்தம் 13 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் போது, வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழக தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு கோரிக்கை வைக்கவுள்ளார். இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் திமுக கடந்த 8 வருடங்களாகவே ஆட்சியில் இல்லை. அதிமுகதான் ஆட்சியில் இருந்துவருகிறது. அதிமுக ஆட்சி நடப்பதற்கு காரணமே திமுகதான். நாம்தாம் ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் பேசி வருகிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றக் கூடிய கட்சியாக திமுக உள்ளது.
இந்த லட்சணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்கிறாராம். பிரதமர் மோடி ஒவ்வொரு நாடாக சென்றுவந்துகொண்டிருக்கிறார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் தற்போது ஆரம்பித்துவிட்டார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் வெளிநாடு செல்கிறாராம். முதலீடுகள் நாட்டுக்கா இல்லை எடப்பாடி பழனிசாமிக்கா? என விமர்சித்தார் ஸ்டாலின்.

















