இந்தியா
அத்வானியை கையிலெடுக்கும் ராகுல்!

பிரதமர் மோடி தனது அரசியல் குருவான அத்வானியை அவமதித்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மோடியின் இந்த செயல் இந்து மதத்திற்கு எதிரானது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி கடந்த ஆறு மக்களவை தேர்தல்களில் வெற்றிபெற்ற தொகுதியான காந்திநகரில் இந்தமுறை அவருக்கு போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காந்திநகர் தொகுதியில் இந்தமுறை பாஜக தலைவர் அமித்ஷா போட்டியிடுகிறார். இது அரசியலில் மட்டுமல்லாமல் பாஜகவிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அத்வானி சமீபத்தில் வெளியிட்ட கடிதம் ஒன்றும் பாஜகவுக்கு எதிராக அமைந்தது. எதிர்க்கட்சிகள் இந்த கடிதத்துக்கு வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி அத்வானி விவகாரத்தை குறிப்பிட்டு பேசி வருகிறார்.
மஹாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பாஜக இந்து மதம் பற்றி பேசுகிறது, இந்துத்துவத்தில் குருதான் முதன்மையானவர். இந்துத்துவா குரு சிஷ்யன் கலாச்சாரத்தைப் பேசுகிறது. மோடிக்கு குரு யார்? அத்வானி தான். அத்வானியை மோடி புறம் தள்ளிவிட்டார். இதுதான் இந்து மதத்தின் கலாச்சாரமா என்று மோடியை கடுமையாக தாக்கினார்.














