இந்தியா
அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

மோடி சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தனது எம்பி பதவியை இழந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவருக்கு மோடி குறித்து அவதூறாக பேசிய மற்றொரு விவகாரத்தில் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து அவர் எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பாட்டார். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. மோடி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பீகார் பாஜகவின் சுஷில் குமார் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பாட்னா நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது.