தமிழ்நாடு
பிளஸ் 2 வினாத்தாள் மாற்றப்படுகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் இயங்க உள்ளது. இந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு சில இடங்களில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் மாற்றம் குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்து கொண்டிருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை ஆரத்தி எடுத்தும், இனிப்புகள் கொடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள் என்பதும் ஒரு பென்ச்சுக்க்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெறும் 6 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடக்கும் என்றும் மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு அனுமதிக்கப் பட்டார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து சென்னையில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது ’தாமதமாக வகுப்புகள் தொடங்குவதால் பன்னிரண்டாம் வகுப்பு பாட திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் பொதுத்தேர்வு வினாத்தாள் மாற்றும் திட்டம் ஏதும் இப்போது இல்லை என்றும் அவர் கூறினார்.
எனவே இந்த ஆண்டு நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வழக்கம்போல் வினாத்தாள்கள் இருக்கும் என்பதும் மாற்றம் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது.




















