தமிழ்நாடு
ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு அவசர பயணம்: மோடி, அமித்ஷாவை சந்திக்கவிருப்பதக தகவல்

முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் இன்று அவசரமாக டெல்லி பயணம் செய்யவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்ல இருப்பதாகவும் டெல்லியில் அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
ஓபிஎஸ் அவர்களின் திடீர் டெல்லி பயணம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி ஆக இருக்கும் நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி கேட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் சமீபத்தில்தான் அமைச்சர்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சர் பதவி மாற்றப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் டெல்லி பயணம் மர்மமாகவே இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



















