இந்தியா
இருமொழிக் கொள்கைக்கு எதிரானது என்பதால் தமிழ்நாட்டுக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் நவோதயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நவோதயா பள்ளிகளை தமிழ்நாடு அரசு திறக்க அனுமதி வழங்கி 2017 செப்டம்பர் 11 ம் தேதி உத்தரவிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரச உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. வழக்கு விசாரணையின்போது இந்த ஒன்றிய அரசின் திட்டத்தை நாங்கள் ஏற்க வேண்டிய அவசியம் கிடையாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் பி.வில்சன் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் “ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது ஆகும். இந்த திட்டம் மும்மொழிக் கொள்கையுடன் வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 38 உறைவிட வசதியுடன் அரசின் மாதிரி பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அணைத்து நிலை மக்களும் எளிதாக அணுகும் வகையில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த பள்ளிகளில் 2024-25 ம் ஆண்டில் மட்டும் 1340 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பல மாணவர்கள் முழுமையாக அரசின் ஸ்காலர்ஷிப் பெற்று சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.
இது தமிழ்நாட்டின் மேம்படுத்தப்பட்ட கல்வித்தரத்தை எடுத்துக் காட்டுகிறது. நவோதயா பள்ளிகள் இல்லாமலேயே தமஜிழ்நாட்டின் கல்வி சிறப்பாக உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அரசின் மாதிரி பள்ளிகள் செயல்பாட்டில் இருக்கும்போது அதன் நகல் போல் உள்ள இந்த நவோதயா பள்ளிகளை தவிர்த்துவிட்டு மாநிலத்தில் தற்போது செயல்பட்டு வரும் மாதிரி பள்ளிகளுக்கு ஒன்றிய அரசு நிதி உதவியை விரிவாக்கம் செய்ய வேண்டும். ஒன்றிய அரசு முன்னதாக ஏற்றுள்ள கடமைகளை நிறைவேற்றாமல் கூடுதலாக நிறுவனங்களை திறப்பது நிதி ரீதியில் மேலும் சிக்கலை ஏற்படு்த்தும். எனவே ஒன்றிய அரசு ஏற்கனவே மாநிலத்திடம் உறுதியளித்த விஷயங்களை நிறைவேற்றி தர வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று பட்டியலில் இருந்தும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














