இந்தியா
பொது சுகாதார துறையில் சுகாதார ஆய்வாளர்கள் நியமனத்தில் 47 பணியிடங்கள் தலிர பிற இடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் அனுமதி.

தமிழ்நாட்டில் 1400 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக காந்தி கிராம் கல்வி நிறுவனத்திலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வி நிறுவனங்களிலும் சுகாதார ஆய்வாளர் முதுகலை டிப்ளமோ படித்திருந்த 47 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணப்பதாரர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி தகுதி பெற்ற இவர்களின் பெயரை தற்காலிக தேர்வு பட்டியலில் சேர்த்து பிற தகுதிகளை நிறைவு செய்திருப்பின் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து துறை சார்பிலும் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. சர்ச்சை வழக்கில் தொடர்புடைய 47 பணியிடங்களை காலியாக வைத்து பிற இடங்களை நிரப்ப அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் சார்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.சினேகா ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் 47 பணியிடங்களை காலியாக வைத்து விட்டு மீதமுள்ள பணியிடங்களை 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைப்படி நிரப்பலாம். காலியாக வைக்கப்படும் 47 பணியிடங்களையும் இந்த மேல்முறையீட்டு வழக்கின் முடிவின் அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும் என்ற உத்தரவிட்டு அரசின் மேல் முறையீட்டு வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்தி வைத்தனர்.









