வணிகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை விதிகளில் புதிய மாற்றங்கள் – குறைதீர்ப்பு கால அவகாசம் குறைப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை (Gratuity) விதிகளில் முக்கியமான மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கும், மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் விதத்தில், சில நிபந்தனைகளின் அடிப்படையில் பணிக்கொடை மற்றும் இறப்புக்குப் பின் வழங்கப்படும் பணிக்கொடை வழங்கப்படும் என புதிய விதிகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், பணிக்கொடைக்கான வட்டி மற்றும் சேவைக்கால கணக்கீடு, அந்தந்த தன்னாட்சி அமைப்புகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும்.
இந்த தகவலை, மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் குறைதீர்ப்பு தொடர்பாகவும் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு தீர்வு காணும் கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 21 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மாதந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புகார் புள்ளிவிவரங்கள் (01.11.2022 – 26.05.2025):
பெறப்பட்ட புகார்கள்: 42,62,459
தீர்க்கப்பட்ட புகார்கள்: 42,73,289
நிலுவையில் உள்ள புகார்கள்: 64,960 (மே 26, 2025 நிலவரப்படி)
சராசரி தீர்வு நாட்கள்: 16 நாட்கள்
மேலும், 2024 அக்டோபரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மட்டும் 5.55 லட்சத்திற்கும் அதிகமான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களுக்கு மின்னணு சேவை வழங்கலை மேம்படுத்த மத்திய அரசு ஒத்துழைக்கிறது. இதற்காக, டார்ஜியாவால் நடத்தப்பட்ட கூட்டத்தில் சண்டிகர், பஞ்சாப், உத்தராகண்ட், மேகாலயா, அசாம், மேற்கு வங்காளம், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் சேவை உரிமை ஆணையர்கள் பங்கேற்றனர். தற்போது, நாடு முழுவதும் 22,000-க்கும் மேற்பட்ட மின்னணு சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் குறைதீர்ப்புக்கான CPGRAMS தளம் மாநிலங்களின் வலைத்தளங்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டது.
ஜூலை 2025 மாதம் மட்டும்:
பெறப்பட்ட புகார்கள்: 1,51,509
தீர்க்கப்பட்ட புகார்கள்: 1,47,902
நிலுவையில் உள்ள புகார்கள்: 67,118
சராசரி தீர்வு நாட்கள்: 15 நாட்கள்
இதன் மூலம் தொடர்ந்து 37 மாதங்களாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.














