வணிகம்
இபிஎஸ் ஓய்வூதிய உயர்வு குறித்து மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

இபிஎஃப் (EPF) உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) மூலம் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கைகள் நீண்ட காலமாக வந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
தனியார் துறை ஊழியர்கள் தங்கள் மாத ஊதியத்தில் 12% பங்கினை இபிஎஃப் கணக்கில் செலுத்துகின்றனர். அதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்துகிறது. இதில் 8.33% EPS-க்கு (ஓய்வூதிய நிதி) செல்கிறது; மீதம் EPF-க்கு சேர்க்கப்படுகிறது. EPS என்பது ஓய்வுக்குப் பின் மாதந்தோறும் ஓய்வூதியத்தை வழங்கும் திட்டமாகும். தற்போது EPS வழியாக வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆகவே உள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, மத்திய நிதி அமைச்சகம் பதிலளித்தது. EPS நிதியில் உள்ள ஆக்சுவேரியல் பற்றாக்குறையால், ரூ.1,000 இலிருந்து ரூ.7,500 ஆக குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த அரசாங்கம் எந்தத் திட்டமும் கொண்டில்லையென தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கூறியதாவது:
EPS என்பது “வரையறுக்கப்பட்ட பங்களிப்பு – வரையறுக்கப்பட்ட நன்மை” திட்டம்.
நிறுவனங்கள் ஊதியத்தின் 8.33% பங்களிப்பு செலுத்துகின்றன.
மத்திய அரசு, மாதத்திற்கு ₹15,000 வரை உள்ள ஊதியத்தில் 1.16% பங்களிப்பை (Budget Support) வழங்குகிறது.
EPS நிதியில் இருக்கும் தொகை மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்.
அதாவது, அரசாங்கம் தற்போது EPS ஓய்வூதியத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்பதும் தெளிவாகிறது. இருப்பினும், அரசு மாதத்திற்கு குறைந்தபட்சமாக ரூ.1,000 ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது.
EPF மற்றும் EPS பங்களிப்புகளின் விபரம்:
பணியாளர் 12% – EPF (ஓய்வூதிய சேமிப்பு, வட்டியுடன் மொத்தம் கிடைக்கும்)
நிறுவனம் 3.67% – EPF (ஓய்வூதிய சேமிப்பு, வட்டியுடன்)
நிறுவனம் 8.33% – EPS (ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம்)
இதன் மூலம் EPF ஓய்வூதிய சேமிப்பை வட்டியுடன் மொத்தமாக வழங்கும் போது, EPS வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியமாக கிடைக்கிறது.


















