இந்தியா
நாடு முழுதும் திறந்த வெளி சிறைகளை அதிகரிக்க அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

சுகாஷ் சக்மா என்பவர் 2020ல் தாக்கல் செய்த மனு வை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப்மேத்தா கொண்ட பெஞ்ச் பிப்ரவரி 26 அன்று அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்…
நாடு முழுதும் உள்ள பல சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கடும் குற்றத்தன்மை இல்லாத வழக்குகளின் கைதிகளை திறந்தவெளி சிறையில் வைத்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த முடியும். அதோடு கைதிகள் பராமரிப்பு செலவும் குறையும்.
உதாரணமாக ராஜஸ்தானில் உள்ள சிறைகளில் ஒரு கைதியை பராமரிக்க தினமும் ரூ.333 செலவாகிறது. ஆனால் திறந்த வெளி சிறையில் ஒரு கைதிக்கான பராமரிப்பு செலவு ரூ.49.60 தான்.
பல மாநிலங்களில் திறந்த வெளி சிறைகள் இல்லை. இருப்பவையும் சரிவரப் பயன்படுத்தப் படுவதில்லை.
திறந்தவெளி சிறைகள் இல்லாத மாநிலங்கள் அவற்றை அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகள் 3 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்.
திறந்தவெளி சிறைகளுக்கு மாற்றப்படுவதற்கான தகுதி விதிமுறைகளில் தேவைப்படும் திருத்தங்களை விரைவாக அமலாக்க வேண்டும்.
பெண் கைதிகளுக்கு அவசியமான வசதிகள் முழுமையாக செய்யப்பட வேண்டும்.
மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் திறந்த வெளி சிறைகள் சீர்திருத்த மையங்களாகசெயல்படுவதால் அவற்றில் பின்பற்றப்படும் நடைமுறைகளை பிற இடங்களில் அமல்படுத்தலாம்.
திறந்த வெளி சிறைகளில் இருக்கும் கைதிகளின் முறையீடுகள் விரைவில் தீர்க்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
இதற்கான சீர்திருத்தம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் நாடு முழுதும் ஒரே வகையில் அமலாக்கிட வழிவகைகளை பரிந்துரைக்க உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி ரவீந்திர பட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. அதில் மத்திய உள்துறை செயலர் அணைத்து மாநில உள்துறை செயலர்கள் சிறைத்துறை உயரதிகாரிகள் இடம் பெறுவார்கள்.
இந்த தீர்ப்பு சரிவர பின்பற்றப்படுகிறதா என்பதை எல்லா உயர்நீதிமன்றங்களும் கண்காணிக்க வேண்டும்.இதற்காக மாநில அளவில் ஒரு குழு அமைக்க வேண்டும். அந்த குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையை எல்லா உயர்நீதிமன்றங்களும் ஆண்டுக்கு ஒரு முறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அடுத்த விசாரணை 2027 மார்ச் 31ல் நடக்கும் என்ற உத்தரவிட்டனர்.













