சினிமா
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்குமா ‘நவோரியா’? சிம்புதேவன் சொன்ன ரகசியங்கள்!

‘நவோரியா’ திரைப்படம் 100 சதவீதம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ளது; குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்கும்” – சிம்புதேவன் பேட்டி.

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘நவோரியா’ திரைப்படம் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், திரைப்படம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இயக்குநர் சிம்புதேவன், படத்தின் உருவாக்கம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், தனது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் நடிகர் விஜய் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

நவோரியா: விறுவிறுப்பான கதை, நகைச்சுவை, பிரம்மாண்ட கிராபிக்ஸ்… ரசிகர்களைக் கவர வரும் ஃபேண்டஸி திரைப்படம்!
‘நவோரியா’ திரைப்படத்தின் தொழில்நுட்ப உருவாக்கம் குறித்துப் பேசிய அவர், இந்தப் படம் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) வேகமாக வளர்ந்து வருவதை மொபைல் போன்களில் பார்க்க முடிகிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தின் துல்லியமான தரம் இன்னும் பெரிய திரைக்குத் தேவையான அளவுக்கு முழுமையாக வரவில்லை. குறிப்பாக, 4K தரத்திலான காட்சிகளை உருவாக்குவதில் AI தொழில்நுட்பத்திற்குச் சில வரம்புகள் உள்ளன. தற்போதைக்கு ஆங்காங்கே சில பேட்ச் ஒர்க் பணிகளுக்கு மட்டுமே அது பயன்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து படத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்துப் பேசுகையில், ‘நவோரியா’ முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்றும், குறிப்பாகக் குழந்தைகளுக்குச் சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்றும் தெரிவித்தார். திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் தங்களை மறந்து சிரிக்கும் வகையில் 100 சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வித்தியாசமான கதாபாத்திரப் பெயர்களுக்குக் காரணம் என்ன?
சிம்புதேவனின் திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் பெயர்கள் எப்போதும் வித்தியாசமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் அமைந்திருக்கும். இதற்கான காரணம் குறித்துக் கேட்கப்பட்டபோது, தான் அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்ட் என்பதால் வித்தியாசமான பெயர்களையும் கதாபாத்திரங்களையும் எளிதாக உருவாக்க முடிகிறது என்று தெரிவித்தார்.
மேலும், அந்தத் துறையில் கிடைத்த அனுபவமே தனது திரைப்படங்களில் இதுபோன்ற தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்க உதவுவதாகக் குறிப்பிட்டார்.
ஒரு திரைப்பட இயக்குநர் கட்டாயம் எழுத்தாளராகவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், இயக்குநரே எழுத்தாளராகவும் இருக்கும்போது, இதுபோன்ற படைப்பாற்றல் சார்ந்த விஷயங்கள் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்றும் தெரிவித்தார்.
விஜய் குறித்து இயக்குநர் சிம்புதேவன் கருத்து!
நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய் குறித்துப் பேசிய சிம்புதேவன், “விஜய் சார் மிகவும் நேர்மையானவர். எந்தப் பணியை எடுத்துக்கொண்டாலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடியவர். எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்.
அதனால், நான் அவரைத் தேடிச் சென்று தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவ்வளவுதான். நாங்கள் எப்போதும் தொடர்பில்தான் இருக்கிறோம். ஆனால், தொடர்பில் இருக்கிறோம் என்பதற்காக எல்லா இடங்களிலும் சென்று தலையிட வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.
இயக்குநர் சிம்புதேவனின் இந்தப் பேட்டி தற்போது கவனம் பெற்றுள்ள நிலையில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘நவோரியா’ திரைப்படம் டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.








