தமிழ்நாடு
கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது: அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 400 க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பும் மிக அதிகமாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவும் ஒமிக்ரானும் சேர்ந்து தற்போது மூன்றாவது அலையாக சுனாமி போல் பரவி வருகிறது என்றும் எனவே மக்கள் தொடர்ந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா மற்றும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அனைவரும் மருத்துவமனை வந்தால் தேவையற்ற பதற்றம் ஏற்படும் என்றும் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மருத்துவ ஆலோசனைக்கு 25384520, 46122300 ஆகிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் 60 வயது கடந்தவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு வரும் பத்தாம் தேதியில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்றும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி ஒன்பது மாத காலம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







