தமிழ்நாடு
1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: அறிக்கையை சமர்ப்பித்தார் அமைச்சர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுகுறித்து நேற்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையின் பின்னர் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கை ஒன்றை தயார் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனை குறித்த அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று முதல்வரிடம் சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்து விரைவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனேகமாக ஊரடங்கு நீட்டிக்கும் அறிவிப்பு வெளியாகும் தினத்தில் பள்ளிகள் திறக்கப்படும் அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















