வணிகம்
மஞ்சள் கொம்பில் மாங்கல்யம்: தங்கமின்றி கல்யாணம் பண்ணும் புதிய வழி!

மஞ்சள் கொம்பில் மாங்கல்யம்: தங்கமின்றி திருமண ஆசை நிரைவேறும்!
தங்கத்தின் விலை வானளாவி இருக்கும் இன்றைய சூழலில், ஏழை எளிய குடும்பங்களுக்கு திருமணத்தில் “தாலி” வாங்குவது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இந்த சிக்கலைக் கவனித்த கோவையைச் சேர்ந்த நகை கலைஞர் ராஜா, மனதை தொட்ட ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார் – தங்கம் இல்லாமல், மஞ்சள் கொம்பில் உருவாக்கிய மாங்கல்யம்!
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த ராஜா, காந்திபுரத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தங்க நகை வடிவமைப்பில் அதிக அனுபவம் பெற்ற இவர், ஏழைகளுக்காக தனது திறமையை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, பாரம்பரிய மஞ்சளைக் கொண்டு மாங்கல்யம் உருவாக்கியுள்ளார்.
தங்கம் இல்லாமல் கல்யாணம் செய்துகொள்ள விரும்புபவர்கள் இந்த மஞ்சள் மாங்கல்யத்தை பயன்படுத்தி கல்யாணம் செய்யலாம் என அவர் தெரிவிக்கிறார். இது தனது உழைப்பின் ஒரு சீர்வரிசை எனக் கூறும் ராஜா, இதை முற்றிலும் இலவசமாக தருவதாகவும் உறுதி செய்கிறார்.
மஞ்சள் கொம்பு, பாரம்பரியத்தின் அடையாளமாய் மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாகவும், கிருமி நாசினியாகவும் விளங்குகிறது. இதனை மாங்கல்யமாக வடிவமைத்து, அதில் திருமணம் செய்யும் மகிழ்ச்சி ஏழைகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என ராஜா நம்புகிறார்.
மஞ்சளில் தாலி உருவாக்குவது தங்கத்தில் செய்வதைவிட சிரமமானது. வெட்டும் முறையில் கவனமும் நேரமும் தேவைப்படும். ஆனால் தனது உழைப்பு ஏழை குடும்பங்களுக்கு பயனாகிறது என்பதில் ராஜா பெருமை கொள்கிறார்.
தற்போது திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இவரிடம் மஞ்சள் மாங்கல்யத்திற்கான கோரிக்கைகள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.









